==========================
ஸ்ரீமன்னார்குடி பெரியவா யாகம் செய்த பிறகு பல யக்ஞங்களை முறைப்படி அடிக்கடி செய்யலானார். இவை யாவிலும் அவருக்கு திருவையாறு ஸ்ரீகுப்புஸ்வாமி ஸ்ரௌதிகள் துணை நின்றார். காலை வேளைகளில் பல வைதிக கர்மாக்களிலும், அத்யயனத்திலும் ஸ்ரீசாஸ்திரிகள் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் எவ்வளவு முக்யமான விருந்தாளியாக இருந்தாலும் அவரிடம் நேராக நெருங்கத் தயங்குவார்கள். ஸ்ரீகுப்புஸ்வாமி ஸ்ரௌதிகள் தனக்காக அவர் காத்திருப்பார் என்ற காரணத்தினால் முன் அறையிலிருந்தே “ஸம்போ மஹாதேவ!” எனக் குரல் கொடுப்பார். உடனடியாக ஸ்ரீசாஸ்திரிகளும், அவருடன் சேர்ந்து தன் கடமைகளைச் செய்ய “சிவ, சங்கர மஹாதேவ!” என பதில் குரல் கொடுத்து வந்து விடுவார். சுகமோ, துக்கமோ எப்போதும் பெரியவாளின் வாயிலிருந்து சிவநாமா மட்டுமே வந்தது. அபசப்தங்கள் எப்போதுமே அவர் வாயிலிருந்து வந்ததில்லை. மேலும் தவப்பயனாக பின்வருவதை முன் அறியும் தீர்க்கதிருஷ்டி அவரறியாமலேயே அவருக்கு அமைந்திருந்தது. அப்படித்தான் ஒருமுறை தன் கடைசி தம்பியான திரு.சாம்பமூர்த்தி ஐயர் சென்னையில் ஆபத்தில் இருக்கிறார் என இவர் மன்னார்குடியிலிருந்து புறப்பட்டுக்கொண்டிருந்த திரு.மகாலிங்க ஐயரிடம் கூற, அவர் நீடாமங்கலத்தை அடைந்தபோதே திரு.சாம்பமூர்த்தி ஐயர் ஜட்காவிலிருந்து கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்ட தகவல் வந்தது.
ப்ரஹ்மஸ்ரீ சாஸ்திரிகளின் கடைக்குட்டி சிஷ்யனாக விளங்கும் பாக்யம் அவர் பெயரன் ஸ்ரீயக்ஞசாமிக்குக் கிடைத்தது. ஏழுவயதில் உபநயனம் செய்விக்கப்பட்ட இந்தச் சிறுவனை கண்டிப்புக்கு பெயர் போனவரான ப்ரஹ்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகளிடம் வேதம் கற்க சாஸ்திரிகள் அனுப்பினார். அங்கு வேத அத்யயனத்தை முடித்த பின்னர் காவியமும் தர்க்கமும் ப்ரஹ்மஸ்ரீ ராதாநரசிம்ஹபுரம் நீலகண்ட தீக்ஷிதரிடம் ஸ்ரீயக்ஞசாமி கற்றுத் தேர்ந்தார். பிறகே ஸ்ரீசாஸ்திரிகளிடம் தர்க்கமும் வியாகரணமும் கற்கும் இதர சிஷ்யர்களுடன் அமர அவர் அனுமதிக்கப்பட்டார். வெகு விரைவிலேயே ஸ்ரீயக்ஞசாமி சாஸ்திரிகள் எல்லா சாஸ்திரங்களிலும் தேர்ச்சியடைந்தார். தர்க்கத்திலும், வேதாந்தத்திலும் அவர் மிகவும் பிரகாசித்தார். சங்கீதத்திலும் நல்ல ருசி அவருக்கு இருந்தது. சிறந்த கவியாகவும் விளங்கினார். பெரியவாளே அவருடைய புலமையைப் போற்றினார்.
ப்ரஹ்மஸ்ரீ சாஸ்திரிகளுக்கு 82 வயதான நிலையில் 1897இல் அவர் துணைவியார் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு காலகதியடைந்தார். அவருக்குத் தன் கொள்ளுப்பெயரனைப் பார்க்க முடியவில்லையே என்னும் குறை இருந்தது. ஸ்ரீசாஸ்திரிகள் அவருக்கு ஆறுதல் கூறி தங்கள் பெயரனின் மனைவி நிறை கர்ப்பிணியாக இருப்பதை அவருக்கு உணர்த்தி “அவளுக்கு மகன்தான் பிறக்கப்போகிறான். அவனை உன் மடியில் கிடத்திக் கொஞ்சுவதாக கற்பனை செய்து பாரேன்” என்றார். கண்முன் விரிந்த அந்த ஆனந்தக் காட்சியில் அந்த அம்மாள் சிறிது மகிழ்ந்தார். சில நாள்களில் இறந்த அவரை தகனம் செய்யத் தூக்கிச் செல்லும் போது ஸ்ரீசாஸ்திரிகள் “அதோ அவள் தன்னுடன் என் அக்னி ஹோத்ரத்தையும் எடுத்துக் கொண்டு போகிறாள்” எனப் புலம்பினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் கூறியபடியே கொள்ளுப் பெயரன் பிறந்தான். ஒரு நாள் பூஜை முடிந்து அவர் வெளியே வந்தபோது தரையில் விடப்பட்டிருந்த குழந்தையைக் கண்டு அதன் அருகே அமர்ந்தவராக தலைமுதல் பாதம் வரை வருடி “என் பெயரனைக் கண்டிப்புடன் பரம்பரை வழிக் கல்வியில் வளர்த்தேன். ஆனால் நீ ஆங்கிலக் கல்விதான் கற்பாய். அதனால் என்ன? உன்னதமாக நீ வரவேண்டும்” என்றார். அந்தக் குழந்தைக்கு ஐந்து வயதில் தானே முன் நின்று அக்ஷராப்யாசம் செய்வித்தார்.
எந்த ஒரு நல்ல விஷயமும் முடிவுக்கு வருமல்லவா? ஸ்ரீமன்னார்குடி பெரியவாளின் மஹோன்னதமான வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்தது. 87 வயது கடந்த நிலையில் அவருக்கு சாதாரணமாக நடமாடக்கூட உதவி தேவைப்பட்டது. அவர் மருமகள் மங்களம்மாள் தான் அவருக்கு எல்லாச் சேவையும் செய்து வந்தார். இந்த நிலையில் ஸ்ரீசாஸ்திரிகள் தன் குருவைக் காண வந்த ப்ரஹ்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளிடம் “இவள் என் மருமகள் மட்டுமல்லள்; என் தாயாரும் கூட” என்றார். அவர் சந்நிதானத்தில் ஒரு மாத காலம் ப்ரஹ்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளின் இராமாயண உபன்யாசம் நடந்தது. 88 வயதாகி படுத்த படுக்கையாகிவிட்ட அவருக்கு குலை இருமல் வேறு வாட்டியும், ஸ்ரீசாஸ்திரிகள் தன்னை உட்கார வைக்கச் சொல்லி உபன்யாசத்தைச் செவிமடுத்தார். அந்த மகானுக்குப் பல முறை தன் தலையைக் கூட தூக்கி வைத்துக் கொள்ள முடியாது போயிற்று. கண்மூடியபடி கேட்டிருந்தார்.
1902ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் மகான் சாஸ்திரப்படி பிராயஸ்சித்தம் செய்து கொள்ள விரும்பினார். வேத பண்டிதர்கள் பலர் அதற்கெனவே வந்து குழுமினர். இது பற்றி அறிந்து அவரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்ட பலரும் அவரை கடைசியாக தரிசனம் செய்து கொள்ள மன்னார்குடிக்கு வந்தனர். திரு.சுப்ரஹ்மண்ய ஜோஸ்யர் என்னும் ஜோதிடப்புலி நீண்டதோர் ஆராய்ச்சிக்குப் பிறகு சாஸ்திரிகளின் ‘நிர்ணய’காலத்தை அன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு மாக மாதம் 21ஆவது நாள், புதன் கிழமை (4-3-1903) பகல் 15 நாழிகை எனக் குறித்தார். ஸ்ரீசாஸ்திரிகள் அவ்வளவு காலம் உயிர் வாழ்வாரா என அவருடைய நிலை கண்டு பலரும் வியந்திருக்க ஜோதிடமே அங்கு வென்றது.
ஜோதிடர் நாழிகையைக் கணிப்பதில்தான் தவறு செய்துவிட்டிருந்தார். பகல் 15 நாழிகைக்குப் பதிலாக இரவு 15 நாழிகைக்கு அம்மஹான் பரம்பொருளில் கலந்தார். அவர் கடைசி காலத்தில் அவருக்கு நெருங்கிய சிலர் அவர் சந்யாச ஆஸ்ரமத்தை நாடுவாரா என அவரிடம் கேட்ட போது தன்னை பந்தங்கள் விடவில்லை எனக்கூறி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதரே சந்யாசத்தை நாடாதபோது தான் எம்மாத்திரம் எனக் கூறிவிட்டார்.
அவருடைய இறுதியாத்திரையில் கலந்து கொண்ட ஜனத்திரளை மன்னார்குடி கண்டதே இல்லை. அவரது ஸம்ஸ்காரங்கள் முடிந்து திரும்பும்போது எல்லாரின் மனத்திலும் வெறுமைதான் நிறைந்திருந்தது. உலகே சூன்யமானது போல அவர்கள் உணர்ந்தனர். அன்று எல்லா கல்வி, வாணிப, மற்றும் அதிகார கேந்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூடப்பட்டன.
ஓர் ஆன்மிக வாழ்வை இப்படித்தான் வாழவேண்டும் என ஓர் உதாரணமாக வாழ்ந்து காட்டி, ஆஸேது இமாசலம் சிஷ்யகோடிகளை உருவாக்கி மஹோன்னதமான, தன்னலமற்ற, அகந்தையற்ற, அடக்கமான, ஆடம்பரம் காணாத வாழ்வு வாழ்ந்து சென்றுள்ள ப்ரஹ்மஸ்ரீ மன்னார்குடி பெரியவாளின் பரிபூர்ண ஆசி நமக்கெல்லாம் வழிகாட்டுமாக.
முற்றும்


No comments:
Post a Comment