Sunday, 23 December 2012











ஆனைகட்டியில்,தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும், கல்லாறில், சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும். மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியயையும், சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடா ர்களை மறைத்து எழுப்பிவைத் திருப்பதை இந்தபடம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும், வட்டங்களும் சதுரங்களும் ஏற்றிவிட்ட பில்டப்பையும் கேட்டுட்டுபோயி கிருத்திகாவில் சீட் போட்டா……. அந்த அரசியல் மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது
ஏன் கும்கி வருகிறது? என்பதில் நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன் ஏன் கொம்பன் வருகிறது?என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வெச்சிருப்பது உறுத்தலாகத்தான் இருக்கிறது
அப்பன் மல்லூரியை ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் . ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ உணர்வுமொழியோ அவருக்கு கைகூடி வந்ததாக தெரியவில்லை ,பாவம் அவர் என்ன செய்வார்…மேலும் அவருக்குமுன்னால நிக்கறபோதும் நடக்கறபோதும் மற்றவர்களின் நடவடிக்கைகள் மல்லூரியை கெட்டிதட்டிப்போன லோக்கல் பஞ்சாயத்து தலைவராக்கிவிடுகிறது.
அவருடைய வீடுடென்று காட்டப்படும் இடம், அநேகமாக சூட்டிங் ஆட்கள் தங்குவதற்காக போடப்பட்ட செட்டாக இருக்கலாம் ஆனால் அது ஒருபோதும் அவரின் வீடாக முடியாது. கூட சிலம்பம் சுழல்வதும் பறையுயொலிப்பதும் இன்னும் அந்நியப்படுத்திவிடுகிறது.
பழங்குடிகளைபொறுத்தவரை மூப்பனுக்கோ வண்டாரிக்கோ மரியாதை என்பது சடங்குகளின் போதுமட்டுமே, மற்றநேரம் அவனுக்கும் ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது சொல்லப்போனால் பெரும்பாலான நேரங்களில் அவன் வெறும் சிக்குமாதாதான்.
பலர் சொல்வதுபோல் அந்த அறுவடை நடனம்கூட பழங்குடிகளுடையது அல்ல, ஆனால் அது அவர்களின் ஒரு கால்வைப்பில்தான்தொடங்குகிறது பிறகு வெகு சில விநாடிகளில் ஒரு சாதரண ரெக்கார்டு டேன்ஸாக அதுவும் மாறிப்போய்விடுகிறது.
அப்புறம் காட்டையழிக்கும் பன்றியை கொல்ல மூன்று இளைஞர்கள் கம்பையும் வேலையும் தூக்கிக்கொண்டு ஓடுவது சிரிப்பையே வரவழைக்கிறது சற்றே சில ஆண்டுகளுக்கு முன்வரை இப்போது கூட பழங்குடிகள், ’’யானை தின்னதுபோக பண்ணி தின்னதுபோக கண்டவர் தின்னதுபோக காடை தின்னதுபோக எனக்கும் கொஞ்சம் கொடு கடவுளே’’ என்றுசொல்லித்தான் விதைபோடத்தொடங்குவார்கள் அப்படியே மேய்ந்தாலும் அவர்கள் இருக்கும்போதுதான் விரட்டுவார்களே அல்லாமல் ஒரு கிலோமீட்டர் மூச்சிரைக்க ஓடிவந்து கொல்வது அவர்களின் பண்பல்ல யுவர் சமூகசெயல்பாட்டாளர்.
அப்புறம்…, கொல்வது என்பது வேறு, விரட்டுவது என்பது வேறு, எப்போது கொல்லவேண்டும் எப்போது விரட்டவேண்டும் என்பதற்கு அவர்களிடத்தில் ஒரு கணக்கு இருக்கிறது சாலமன்
’’திந்தா திந்துட்டுபோகுது ராஜா, அச்சா பெல்லா வகுத்துக்குக்கு அது ஏங்க போகும்’’. முயல்வந்தால் கூட குலைக்கிற, துரத்துகிற அவர்களின் நாய்கள் அருகாமையில் யானைவந்தால் அமைதியாக இருந்துவிட பழகியிருக்கிறது. யானை தனது காட்டுக்குள் நுழைந்துவிட்டது தெரிந்தால் ’’போனாவருசமும் எம்க்கு ஒந்தும்ங்கெடாய்கல இந்த வருசமாவது நேம் பொழைக்கே…. சாமி போயிறு’’ என்று அது இருக்கும் திசையில் குனிந்து மண்ணை தொட்டு எழுந்து வணங்குவதை அவர்கள் இன்னும் கடைபிடித்துதான் வருகிறார்கள்.
அவர்களுக்கும் அதுக்கும் நடக்கும் சண்டையானது வெறும் உள்முரண்பாடுதான். பல நேரம் அவைகள் இவர்களோடு விளையாட்டாக செயல்படுவதை நேரடியாக பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களின் படம் காட்டு யானைகளை கொடூரமான வில்லனாக பார்க்கவைப்பதில் வெற்றிபெற்றுவிடுகிறது
காட்டானை யாரையாவது அடித்துவிட்டால் அது கிடு கிடுவென நடுங்க ஆரம்பித்துவிடும் .அப்புறம் அது ஒரு ஆளை அடித்துவிட்டு அடித்த இடத்திலேயே ஒருபோதும் நிற்காது. அதானால் அப்படி நிற்கவும் முடியாது. இங்கோ ஒரே நேரத்தில் 5 பேரை சதக் சதக் என்று போட்டுத்தள்ளிவிட்டு மேனனையும் துரத்துவது அது ஏதோ தமிழ் ’ஏக்சன்’ படம் பார்த்துவிட்டு நேராக காட்டுக்குள் வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது .
யானை ஒருவரை தாக்குவது என்பது அதற்கு இருக்கிற பயத்தினால்தானே ஒழிய, அது தன்னை பெரிய தாதாவாக நினைத்துக்கொள்வதால் அல்ல….
இந்த சம்பவத்தை உங்களுக்கு கட்டாயமாக சொல்லியே ஆகவேண்டும்.
மேற்குதொடர்சிமலையில் அட்டப்பாடிக்கு அருகில் கல்மொக்கே என்றொரு பழங்குடியின் பதியிருக்கிறது அங்கே நாகன் என்ற இருளர் தனது கூரையில் இரண்டு வாழைமரக்கன்று வைத்து வளர்த்துவந்தார் அது இரண்டும் குலைவிட்டிருந்தது. வனத்துக்கும் அவர் வீட்டுக்கும் ஒரு கிலோமீட்டர்தான் இருக்கும். ஒரு நாள் மதியம் மூன்று மணியிருக்கும் பதினாறு வயதான ஒரு காட்டனை அருகில் இருந்த வனத்திலிருந்து எட்டிப்பார்த்தது. அடுத்த 5 நிமிடத்தில் இன்னொரு யானையும் வந்து அதனோடு சேர்ந்துகொண்டது.
அவர் கூப்பிட்டுகாட்டினார் ’பாத்துட்டே இருங்க அவனுக ரெண்டுபேரும் எங்கூட வெளையாடறத….இப்ப நான் மறஞ்சுக்கறேன் என்ன பண்ரான்னு மட்டும் பாருங்க’
அவர் கூரை மறைவில் போய் நின்றுகொண்டார்.
ஒரு யானைமட்டும் அங்கிருந்து வேகமாக வாழைமரத்தை நோக்கி வரத்தொடங்கியது
நாகன்,மாட்டை பிடிப்பதுபோல் வீட்டிலிருந்து வெளியேறி வாழைமரத்தை தாண்டிப்போனார்
வந்த யானை அப்படியே நின்று அவரை பார்த்துவிட்டு, தலையை ஆட்டி ஆட்டி.தன் திசையை மாற்றிக்கொண்டு மேய்வது போல் நடித்தது….
அவர் மாடு கட்டிய இடத்தை விட்டு கூரைக்குள் வந்துநின்றுகொண்டார்.
திரும்பிப்பார்த்தது… நாகனைகாணோம்….. மீண்டும் மரத்தை நோக்கி வேகமாக வரத்தொடங்கியாயிற்று
திரும்பவும் அவர் இறங்கி ஆட்டுக்குதழைகொடுக்கபோவதுபோல் வாழைமரத்தை கடந்துபோனார்
ஏர் பிரேக் போட்டதுபோல் சறுக்கி நின்றது யானை.
திரும்பவும் வீட்டுக்குள் போனார்
குறுகுறுவென்று பார்த்தது. யாரும் இல்லை நகனையும் வெளியே காணோம் அவன் வருவதற்கான அறிகுறிகள் இல்லை ஆனாலும் வந்துவிட்டால்…… ’வருவதற்க்குள் அபேஸ் பண்ணிட்டு எஸ்கேப் ஆயிரனும்’
அவ்வளவுதான் …குடுகுடுவென ஓட்டமாக வந்து ஒரே ஒரு தாரை மட்டும் பிடிங்கிக்கொண்டு சவாரியெடுத்தது….. பாதி தூரம் போய் வாழைத்தாரை கீழே வைத்துவிட்டு திரும்பிப்பார்த்தது……,மெல்லமாய் நாகன் வெளியே வந்து எட்டிப்பார்த்தார்
அவர்முகத்தை கண்டதும் மறுபடியும் வாழைத்தாரை தூக்கிக்கொண்டு தலை தெரிக்கஓடி வனத்துக்கு அருகில்போய் நின்றுகொண்டு திரும்பிப்பார்த்தது.
’’பயத்தப்பாரு …..போ போ அது உனக்குன்னுதா விட்டிருந்தே’’ நாகன் குலுங்கிக்குலுங்கி சிரித்தார் அவரின் அட்டகாசமான சிரிப்பில், என்னால் சகோதரத்துவத்தைதான் பார்க்கமுடிந்தது
இப்படியான விளையாட்டை நீங்களும் நானும், ஒருக்காலும் நிகழ்த்தமுடியாது….. யானையோடு மட்டுமல்ல இன்னபிற விலங்குகளோடும் காட்டோடுமான அவர்களின் உறவு உயிரோட்டமானது.
கும்கியை அழைப்பதென்பது அவர்களிடத்தில் ஒருநாளும் நடந்ததில்லை… அரசாங்கம் அனுப்ப எத்தனித்த கும்கியை முகாமுக்கே திருப்பியனுப்பிய ஆதிவாசிகளை நான் அறிந்திருக்கிறேன். அந்த வல்லமைதான் அவர்களின் வலிமை சாலமன்.
கடைசி சீனில் கொம்பன். மலையிடுக்குகளில் மாணிக்கத்தால்(கும்கி) முட்டி தள்ளிவிட்டபின் பழங்குடிகள் மகிழ்சி ஆரவாரம் எழும்புவதாக காட்டியிருக்கிறீர்கள் ஆனால் உண்மை அப்படியானதாக ஒருபோதும் இருந்திருக்கமுடியாதுசாலமன்.அதற்கு பதிலாக அவர்கள் கொம்பனுக்காக கண்ணீர்தான் வடித்திருப் பார்கள் .
தன் சொந்த மகன் கொம்பனால் மிதிபட்டு இறந்தபோதுகூட கண்ணீர் விடாத இருளர்கள் அதே கொம்பன் உயரழுத்த மின் வேலியில் சிக்கி இறந்தபோது சகலமரியாதையும் செய்து கண்ணீர் வெள்ளத்தில்தான் அடக்கம் செய்தார்கள் சாலமன்.
சாலமன்…., அவர்களின் பண்பாடுகள், ஆழமான….. அருவியைவிடவும் உயரமான மலைகளை….. விடவும் அகலமான காடுகளைவிடவும் மேலானது.
வானளாவிய அதிகாரம் படைத்த வனத்துறையின் அத்துமீறல்கள் சொற்ப இடங்களில் மின்னலாக வந்துபோய்விடுகிறது காட்டுக்குள்ளேயே களமிருக்கும்போது அப்படியானதா அந்த அதிகாரம்.
’’மூன்று தலைமுறையாக வனத்துக்குள் இருக்கின்ற பழங்குடிகளுக்கும் வனம்சார்ந்த பிற குடிகளுக்கும் பட்டாவை கொடுத்துவிடு இனியும் அவர்களை வஞ்சிக்காதே’’ என்று காலரைப் பிடித்து உலுக்கும் 2005 வனச்சட்டத்தை கண்டதுண்டமாக்க, புலிகள் காப்பகங்களை கையிலெடுத்து தாண்டவமாடும் அதிகாரிகளுக்கும், அக்மார்க் கன்சர்வேசனிஸ்டுகளுக்கும் எதிராக ஏதாவது ஒரு இடத்தில் சாட்டை வேண்டாம், லஷ்மி மேனனின் அந்த ’அடையாளச் ஜடை’யாவது சுழன்றிருந்தால் சந்தோசமாக இருந்திருக்கும்.
கும்கியாக வெற்றிபெற்று கொம்பனாக தோல்வியுற்றிருக்கும் உங்களுக்கு இன்னொன்றையும் சொல்லமுடியும் .
கொம்பன் குமுளியில் இருந்தாலும் கொத்தல்லி சோளகர்தொட்டியை காட்டிக்கொடுத்துவிடுகிறான்.

No comments:

Post a Comment